குழந்தை வளர்ச்சி
குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயளாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்பதனை பெற்றோர்கள் உணர வேண்டும். பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.
அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை எனில் ,உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும் பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம். சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் அதிவேகத்தில் நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். குழந்தை நடப்பதற்குத் தயாராக இல்லாத தருணத்தில்,குழந்தையை நடக்கச் சொல்லி வலுக்கட்டாயமாகப் பயிற்சி கொடுத்தல் எந்தவித பலனையும் தராது.
குழந்தைகலின் வளர்ச்சி நிலைகள்
முதல் மாதம் கை, கால்களில் அசைவு இருக்கும். 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.
இரண்டாம் மாதம் அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.
மூன்றாம் மாதம் தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.
நான்காம் மாதம் நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.
5ம் மாதம் ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பார்கள். கவிழ்ந்து கொள்ள முயற்சித்து கை சிக்கிக் கொண்டு அழுவார்கள். இந்த மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே இருக்கும்.
6ம் மாதம் வாயில் நுரை வரும். பேசுவதற்கு வாயைக் குழப்புவார்கள். கவிழ்ந்து கொள்வார்கள். தலை நன்றாக நிற்கும். பால் பற்கள் முளைக்கத் துவங்கியிருக்கும்.
7ம் மாதம் ஒரு முறை கவிழ்ந்தும், அதில் இருந்து திரும்ப மல்லாக்காக படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் பின்னுக்கு செல்ல காலை உதைக்கத் துவங்கும். உட்கார வைத்தால் உட்காருவார்கள்.
8ம் மாதம் பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள். தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.
9ம் மாதம் ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.
10ம் மாதம் அத்தை, தாத்தா, மாமா போன்றவற்றை நன்கு உச்சரிப்பார்கள். தாயின் பாடலுக்கு நடனமாடுவார்கள். டாடா சொல்வது, உணவை மறுப்பது, தெரியாதவர்களிடம் செல்ல மறுப்பது போன்றவை உருவாகும்.
12ம் மாதம் ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள். பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும். பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.
வளர்ச்சி சுருக்கமாக
- 2 மாதங்கள் – புன்சிரிப்பு,லேசான சிரிப்பு
- 4 மாதங்கள் – கழுத்து நிற்பது,கை,கால்களை சிறித்ளவு அசைக்கும்
- 8 மாதங்கள் – எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காருதல்
- 12 மாதங்கள் – எழுந்து நிற்பது
பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்
- தலையை ஒருபுறமாகத் திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக்கொண்டு இருக்கும்.
- திடீரென்று உருவாகும் சத்தம் கேட்டு குழந்தையின் உடல் விறுக்கென்று சிலிர்த்துக் கொள்ளுதல்.
- கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருத்தல்.
- குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாகப் பிடித்து வைத்து கொள்ளுதல்.
- குழந்தையிடம் ஏதாவது பொருள்,கைகளை கொடுத்தால் அவை தன்னுடைய உறுப்பால் ஒன்று என நினைத்துக் கொள்ளும்.
6 முதல் 12 வாரங்கள்
- குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.
- பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.
- குழந்தை திடீரென அழுகும்
3 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
- மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகை சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
- குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.
- குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.
- குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.
- அம்மாவை தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
6 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
- குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும்.
- தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.
- குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும்.
- எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும்.
- தாய் (அ) பிறர் உதவி செய்தால் அதை மறுத்து தானே செயல்பாட முயற்சி செய்யும்.
- குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
- குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய உடல் எடையை நீட்டிய நிலையில் உள்ள கைகளைக் கொண்டு தாங்கிக்கொள்ளும்.
9 மாதங்கள்
- கைகளை ஊன்றியோ ,எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும்
- குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.
- அருகிலுள்ள பொருள்களை தள்ளி விட ஆரம்பிக்கும்.
12 மாதங்கள்
- குழந்தை எழுந்து நிற்கும்
- தாத்தா,பாட்டி,மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.
- வீட்டில் உள்ள பொருட்களையும் சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.
- பிறரின் கையை பிடித்துக் கொண்டு நடக்க முயலும்.